அரிசி vs கோதுமை

அரிசி vs கோதுமை – எது ஆரோக்கியமானது…?

ஒருபுறம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் உலகளவில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்க, மறுபுறமோ, கார்போஹைட்ரேட்டு எனும் மாவுச்சத்து அதிகமுள்ள கோதுமையும் அரிசியும் உலகின் பிரதான உணவுப்பொருட்களாக உள்ள நிலையில் இந்த கேள்வியை நாம் எதிர்கொள்வதில் ஆச்சரியமில்லை.

ஏனெனில், மேற்கண்ட நோய்களின் மூலக்காரணம் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய மாவுச்சத்துள்ள உணவை நாம் அதிகம் உட்கொள்வதே. எனவே, இவ்விரண்டில் ஆரோக்கியமானதைத் தேர்ந்தெடுப்பதற்கு, நாம் முதலில் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

 
ஒரு தானியத்தில் என்னவெல்லாம் இருக்கிறது…?

அடிப்படையில், ஒரு தானியத்திற்கு – 3 பாகங்கள் உள்ளன. அவை:

 தானியத்தின் சத்துக்களை உள்ளடக்கிய விதை, விதையை சூழ்ந்திருக்கும் மாவுச்சத்தால் ஆன தசைப்பகுதி, அதனை சுற்றியுள்ள நார்ச்சத்து மிக்க தவிடு.

பொதுவாக தானியங்கள் சுத்திகரிக்கப்படும்போது, தவிடு மற்றும் விதைகள் அகற்றப்பட்டுவிடுவதால், நாம் தானியம் என்ற பெயரில் அதன் மாவுச்சத்தைக் கொண்ட தசைப்பகுதியை மட்டுமே சாப்பிட்டு வருகிறோம். கோதுமை மற்றும் நெல் ஆகிய இரு தானியங்களிலும் தவிடு, விதை மற்றும் சூழ்தசையும் உள்ளன; ஆனால் நெல்லில் கூடுதலாக உமி எனும் கூடு போன்ற அமைப்பும் இருக்கும்.

 

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி vs சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியிலும், கோதுமை மாவிலும் அந்தந்த  தானியத்தின் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட  கோதுமை மாவு என்பது அந்த தானியத்தின் தூளாக்கப்பட்ட சூழ்தசையே அன்றி வேறில்லை. வெள்ளை அரிசி மற்றும் கோதுமை மாவு இவ்விரண்டும் 77 என்ற அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், இவை இரண்டும் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. 

கிளைசெமிக் குறியீடு என்பது ஒரு மாவுச்சத்துள்ள பொருள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும் ஆற்றலை உணர்த்தும் குறியீடாகும். வெள்ளை அரிசி மற்றும் கோதுமை மாவு இரண்டிலும் மாவுச்சத்து மட்டுமே உள்ளதால், அவை இரும்பு, வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களால் செயற்கையாக வளப்படுத்தப்படுகின்றன.

மேலும் இவற்றை உட்கொள்வதால், வைட்டமின் பி1 குறைபாடு நோய்க்குறியான தவிட்டான் (Beri Beri) என்ற நரம்பியல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வைட்டமின் பி2, பி3 குறைபாடு, நாடித்துடிப்பு அதிகரித்தல், வீக்கம் மற்றும் நினைவாற்றல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, இவை நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

பழுப்பு அரிசி vs முழு கோதுமை

விதை மற்றும் தவிடு ஆகியவையும் இருப்பதால், பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை (அல்லது முழு கோதுமை மாவு) ஆகியவற்றில் சத்துக்கள் மிகுந்து காணப்படும். ஏனெனில் ஒரு தானியத்தின் சத்துக்களில் 95% அதன் விதையிலும் தவிட்டிலுமே நிறைந்திருக்கும். 

பழுப்பு அரிசியானது முழு கோதுமையை விட ஆரோக்கியமானது. ஏனெனில், பழுப்பு அரிசியின் கிளைசெமிக் குறியீடானது (68) முழு கோதுமை (72) யின் அளவை விட குறைவானதாகும். நீங்கள் முழு கோதுமை மாவை வாங்கி பயன்படுத்துவபராக இருந்தால், 51% முழு கோதுமை மாவுடன் 49%  சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவை கலந்து முழு கோதுமை மாவு என்கிற பெயரில் விற்கலாம் என்பதை அறிந்து உபயோகிக்க வேண்டும் அல்லது கோதுமையை வாங்கி அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

 

கவுனி அரிசி vs …..?

ஒப்பீட்டிற்க்கே ஆளில்லாத அளவிற்கு அவ்வளவு சத்துக்களை கொண்டது இந்த கவுனி அரிசி. எந்தவொரு கோதுமை வகையோ, மற்ற அரிசி வகைகளோ நெருங்க முடியாத அளவு இதன் கிளைசெமிக் குறியீடு 52 எனும் மிகக் குறைவான அளவாக உள்ளதன் காரணம், இது உமி, தவிடு, விதை மற்றும் தசை என அனைத்து பகுதிகளையும் கொண்டிருப்பதே ஆகும். சந்தேகமின்றி மிக ஆரோக்கியமானது இந்த கவுனி அரிசியே.

 

பொதுவான சில தகவல்கள்:

பழுப்பு அரிசி, கவுனி அரிசி மற்றும் முழு கோதுமை மாவு ஆகியவற்றில் பைடிக் அமிலம் என்னும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் எனும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. சில சத்துக்கள் கிரகிக்கப்படுவதை தடுக்கும் இவை புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது.

கோதுமையில் அரிசியை விட கால்சியம், வைட்டமின் பி3 மற்றும் துத்தநாகமும் அதிகம் உள்ளது. அரிசியில் ஃபோலிக் அமிலம் எனும் ஊட்டச்சத்து கோதுமையை விட அதிகம் உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள க்ளுட்டன் எனும் பசையம் நமக்கு செரிமானப் கோளாறுகளை ஏற்படுத்தும்.

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் அரிசியில் ஆர்செனிக் மற்றும் கோதுமையில் கிளைபோசேட் எனும் நச்சுப்பொருட்களின் தாக்கம் மிக நுண்ணிய அளவில் காணப்படும்.

இந்த நெல் மற்றும் கோதுமை தானியங்களைக் கொண்டு   பல்லாயிரம் வருடங்களாக மனிதன் தன் உணவு பாதுகாப்பையும் உடல் உறுதியையும் பாதுகாத்து வந்தான். ஆனால் இன்று, நாம் சுத்திகரிக்கப்பட்டவை என்ற பெயரில் அவன் பாதுகாத்த இரண்டையும் தொலைத்து வருகிறோம். இந்த நிலையில் நாம் உண்ணும் உணவே நம் உடலாகும் என்பதையும், நம் உடல் ஆரோக்கியமே நாம் சேர்க்கும் பெரும் செல்வமாகும் என்பதையும் நினைவில் கொள்வோம். விரைவில் வெல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart